News

மாலியில் ராணுவ முகாமுக்குள் புகுந்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 8 வீரர்கள் பலி

 

 

மாலியில் ராணுவ முகாமுக்குள் புகுந்து கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 8 வீரர்கள் பலியாகினர்.

மாலி, நைஜர், சாத், புர்கினோ பாசோ மற்றும் மவுரித்தேனியா ஆகிய 5 ஆப்பிரிக்க நாடுகளை உள்ளடக்கிய ‘ஜி5 சஹேல்’ நாடுகளில் பிரான்ஸ் ‘ஆபரேஷன் பார்கேன்’ என்ற பெயரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

அதன் ஒரு பகுதியாக மாலி நாட்டில் சுமார் 3 ஆயிரம் பிரான்ஸ் வீரர்கள் முகாமிட்டு ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வந்தனர்.

ஒருபுறம் பயங்கரவாதிகள், மற்றொரு புறம் கிளர்ச்சியாளர்கள் என இருமுனை தாக்குதல்களை எதிர்கொள்ளும் மியான்மர் ராணுவத்துக்கு பிரான்ஸ் படைகள் பெரும் பக்கபலமாக இருந்து வந்தன.

இந்த சூழலில் கடந்த 2020-ம் ஆண்டின் பிற்பகுதியில் மாலி ராணுவம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு பிரான்ஸ் உடனான உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது.

ராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து ஜனநாயக அரசை அமைத்திட மாலி ராணுவ ஆட்சியாளர்களுக்கு பிரான்ஸ் அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததால் இரு தரப்பு மோதல் வலுத்தது. இதன் எதிரொலியாக மாலியில் இருந்து படைகளை திரும்பப்பெறுவதாக பிரான்ஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. அதை தொடர்ந்து பிரான்சின் நட்பு நாடுகளும் மாலியில் உள்ள தங்கள் படைகளை திரும்பப்பெறுவதாக அறிவித்தன.

இதை தொடர்ந்து பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் மாலி ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் மாலியின் வடகிழக்கு மாகாணம் ஆர்காமில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்று முன்தினம் இரவு கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்களில் வந்து ராணுவ முகாமை சுற்றி வளைத்த கிளர்ச்சியாளர்கள் முகாமுக்குள் அதிரடியாக நுழைந்து துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். என்ன நடக்கிறது என ராணுவ வீரர்கள் சுதாரிப்பதற்குள் கிளர்ச்சியாளர்கள் இந்த கொடூர தாக்குதலை அரங்கேற்றிவிட்டு தப்பி ஓடினர்.

இதில் ராணுவ வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 14 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். அது மட்டும் இன்றி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 5 வீரர்கள் மாயமாகினர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

இதனிடையே கிளர்ச்சியாளர்கள் ராணுவ முகாமுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 57 கிளர்ச்சியாளர்கள் கொன்று குவிக்கப்பட்டதாகவும் மாலி ராணுவம் தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top