Canada

ரொறன்ரோவில் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தி திரண்ட மக்கள்: ஒருவர் கைது.

 

ரொறன்ரோவில் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தி சனிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரொறன்ரோவின் குயின்ஸ் பார்க்கில் சனிக்கிழமை பகல் குறித்த ஆர்ப்பாட்டம் துவங்கியது. திரளான மக்கள் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தியும், தடுப்பூசி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை வைத்தனர்.

 

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலானோர், தடுப்பூசி, மாஸ்க், பொது சுகாதார விதிமுறைகள் எதுவும் தங்களுக்கு தேவை இல்லை என முழக்கமிட்டுள்ளனர்.

மட்டுமின்றி, அரசாங்கம் உரிய முறையில் பெருந்தொற்றை எதிர்கொள்ள தவறியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், மதியம் 2:30 மணியளவில், குயின்ஸ் பூங்காவின் வடக்குப் பகுதியில் 22 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

ஆர்ப்பாட்டத்தின் போது ஆயுதங்களால் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் புகை வெடிகுண்டை வீசியதாகவும் கூறி பொலிசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ப்ளோர் ஸ்ட்ரீட் மேற்கு மற்றும் அவென்யூ சாலை சந்திப்பில் இருந்து பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்தது. இதில், நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பல டிரக்குகள் பல மணி நேரம் சாலையை மறித்ததால் ரொறன்ரோ நகரம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top