News

உக்ரைனின் 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு

 

 

பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக உக்ரைனின் 4 நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது.

உக்ரைன் மேற்கத்திய நாடுகளுடன் கைகோர்த்துக்கொண்டு ரஷியாவை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது என்பன உள்ளிட்ட பல பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த நாட்டின் மீது கடந்த மாதம் 24-ந் தேதி ரஷியா போரை தொடங்கியது.

தலைநகா் கீவை கைப்பற்றிவிட்டால் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமித்துவிடலாம் என்கிற எண்ணத்தில் ரஷிய கீவ் நகரை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த தொடங்கியது.

ஆனால், அங்கு உக்ரைன் துருப்புகளின் கடுமையான பதிலடி காரணமாக ரஷிய படையினரால் கீவ் நகருக்குள் தொடர்ந்து முன்னேற முடியவில்லை. இதனால் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது ரஷியா.

அந்த வகையில் உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ், தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் மற்றும் வடகிழக்கு நகரமான சுமி ஆகிய நகரங்களில் ரஷிய படைகள் பல முனைகளில் இருந்தும் உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வந்தன.

இதனால் அந்த நகரங்களில் சிக்கியிருக்கும் வெளிநாட்டினர் மற்றும் உக்ரேனியர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக சுமி நகரில் 700-க் கும் அதிகமான இந்திய மாணவர்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி யுத்த களத்தில் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் அவர்கள் சுமி நகரில் இருந்து வெளியேற தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உக்ரைன் மற்றும் ரஷியா என இருதரப்பையும் இந்தியா கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் மற்றும் சுமி ஆகிய 4 நகரங்களிலும் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷியா நேற்று அறிவித்தது. அந்த நகரில் சிக்கியுள்ள பாதுகாப்பாக வெளியேறவும், மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளுக்காகவும் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்துவதாக ரஷியா அறிவித்தது.

முன்னதாக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மரியுபோல், வோல்னோவாகா நகரங்களில் ரஷியா தற்காலிகமாக போர் நிறுத்தத்தை அறித்தபோதும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு உக்ரைன்தான் காரணம் என ரஷியாவும், ரஷியாதான் காரணம் என உக்ரைனும் பரஸ்பரம் குற்றம் சாட்டின.

இந்த சூழலில்தான் 4 நகரங்களில் ரஷியா போர் நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது. ஆனால் அந்த நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற தொடங்கியுள்ளனரா என்கிற தகவல்கள் கிடைக்கவில்லை.

அதேநேரத்தில், “போர் நிறுத்தம் என்பதே கண்துடைப்பு. தற்காலிகமாக போரை நிறுத்துவதாக அறிவித்துவிட்டு, ரஷியா குண்டு வீசி தாக்குவதை தொடர்கிறது” என்று உக்ரைன் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

அந்த வகையில் தலைநகர் கீவை சுற்றியுள்ள பல நகரங்களில் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக இர்பின் நகரில் தொடர்ச்சியாக பீரங்கி குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன.

இதில் குடியிருப்பு கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவையும் குறிவைக்கப்படுகின்றன. இதனால் ரஷிய தாக்குதல்களில் பொதுமக்களின் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை பொதுமக்கள் 406 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 800-க் கும் அதிகமானோர் படுகாய மடைந்துள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top