News

உக்ரைன் போருக்கு எதிராக ரஷியாவில் தொடரும் போராட்டம் – பலர் கைது..!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரஷிய போலீசார் கைது செய்தனர்.

உக்ரைன் மீது ரஷிய படைகள் 8 ஆவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பை எதிர்த்து ரஷியாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ரஷியாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில், போர் எதிர்ப்புப் போராட்டக்காரர்களைக் கைது செய்துள்ளதாக ரஷிய போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

போருக்கு எதிரான பதாகைகளை வைத்திருந்த போராட்டக்காரர்கள் ரஷிய அரசுக்கு எதிராக கோசமிட்டனர். கடந்த வியாழன் முதல் ரஷியாவில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 7,615 பேர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, மாஸ்கோவிற்கு வெளியே உள்ள ஒரு தண்டனைக் காலனியில் இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top