News

போரால் நிலைகுலைந்துள்ள உக்ரைனுக்கு 723 மில்லியன் டாலர் நிதியுதவி – உலக வங்கி ஒப்புதல்

 

 

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு 723 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷிய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது.

இதனிடையே, ரஷியா நடத்தி வரும் தாக்குதலால் உக்ரைனில் இருந்து பொதுமக்கள் போலாந்து, ஸ்லொவாகியா, மால்டோவா, ஹங்கேரி, பெலாரஸ் ஆகிய அண்டை நாடுகளுக்கு அகதிகளாக நுழைந்து வருகின்றனர்.

இதற்கிடையில், ரஷியா தொடுத்துள்ள போரால் உக்ரைன் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. அந்நாட்டின் நிதி நிலை சீர்குலைந்துள்ளது. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அண்டைநாடுகளிலுக்கு அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு 723 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக வழங்க உலக வங்கி இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிதியுதவி போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் மாதங்களில் உக்ரைனுக்கு கூடுதலாக 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்க உள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top