அதிபர் புதினால் சிறையில் இறந்து கொண்டு இருக்கிறேன் எனவும் தன்னை காப்பாற்றும்படியும் அமெரிக்காவிடம் ஜார்ஜியா முன்னாள் அதிபர் கோரிக்கை விடுத்து உள்ளார்.
ஜார்ஜியா நாட்டின் முன்னாள் அதிபராக இருந்தவர் மைக்கேல் சாகாஷ்விலி. இவர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்ற அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்.
இந்நிலையில், அவரது அமெரிக்க சட்ட வழக்கறிஞர் உதவியுடன் சில விசயங்களை மைக்கேல் வெளியிட்டு உள்ளார். அதில், ஜார்ஜியாவின் ஆளும் கட்சி ரஷியாவுக்கு தனது ஆதரவை அதிகரித்து வருகிறது என குற்றச்சாட்டு கூறியுள்ளார். அவர், ஜார்ஜியன் சிறையில் இறந்து கொண்டு இருக்கிறேன். தனது இந்த சூழ்நிலைக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினே காரணம் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
உடல் மற்றும் மனரீதியாக திட்டமிட்ட முறையில் சிறையில் தன்னை கொடுமைப்படுத்தி வந்தனர். எனது உடலில் அதிக உலோக விஷம் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன. எனக்கு தொடர்ச்சியாக ஏற்பட்ட 20-க்கும் மேற்பட்ட நோய்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளேன். இவை அனைத்தும் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே வந்தவை. சிறை வைக்கப்பட்ட பின்னர், தனது உடல்நலம் வெகுவாக மோசமடைந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
2008-ம் ஆண்டில் ஜார்ஜியாவின் அதிபராக மைக்கேல் இருந்தபோது, ரஷியாவுக்கு எதிரான போரில் அந்நாடு ஈடுபட்டது. போரை தொடங்கியதற்காக அப்போது, மைக்கேலை அவரது அந்தரங்க உறுப்புகளை கொண்டு தூக்கில் போட வேண்டும் என ரஷிய அதிபர் புதின் அதிரடி மிரட்டல் விடுத்த விசயங்களையும் குறிப்பிட்டு உள்ளார்.
மைக்கேல், தற்போது தனது இந்த நிலைமைக்கு நிச்சயம் புதினே பொறுப்பு ஆவார் என கூறியுள்ளார். ரஷிய உளவாளிகள் ஜார்ஜியன் பாதுகாப்பு சேவைக்குள் ஊடுருவி தனக்கு விஷம் வைத்து விட்டனர் என்றும் கூறியுள்ளார். சரியான மருத்துவ உதவி இன்றி விரைவில் இறந்து விடுவேன் என அலறியுள்ள அவர், அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகம் இணைந்து, ஜார்ஜிய அரசுக்கு தூதரக அளவிலான நெருக்கடி கொடுத்து தனது உயிரை பாதுகாக்கும்படி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.