‘‘இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு காரணமான சிங்கள அரசு தண்டிக்கப்பட வேண்டும்‘‘ என மறுமலர்ச்சி தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெசன்ட் நகர் கடற்கரையில் மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்ததாவது,
‘கனடா பிரதமர் ஜஸ்டின் துரூடோ கடந்த வருடம் கனடா நாடாளுமன்றில் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் ஒன்றினை கனடா நாடாளுமன்றில் நிறைவேற்றினார்கள் அதை இந்த ஆண்டு மே 18ஆம் திகதி அவர் நினைவுப்படுத்தி பேசினார்.
ஆத்திரமுற்ற சிங்கள அரசு கனடா நாட்டு தூதுவரை அழைத்து ‘எங்கள் நாட்டு பிரச்சினையில் நீங்கள் இப்படி தலையிடுக்கின்றீர்கள் என்று தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தார்கள்‘ ஆனால் கனடா அதற்கு அசைந்து கொடுக்கவில்லை.
எப்படி அல்பேனியாவில் நடந்த படுகொலைக்கு ஜேர்மனிய நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோ, அதே போல கனடா நாடாளுமன்றில் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது‘‘ என்றார்
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே என கனடா சுட்டிக்காட்டியது போல உலகத்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் இந்த இனப்படுகொலையை சுட்டிக்காட்டி இந்த படுகொலைக்கு காரணமான சிங்கள அரசுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அது உலகம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் அதுவே நாம் தீர்வாக வைத்திருக்கின்றோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈழத்தமிழர்களின் உரிமை கோரிய யுத்தம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டு 14 வருடங்கள் ஆகியுள்ளன.
சொல்லொண்ணா துயரங்களையும், வடுக்களையும், வலியையும் தந்துச் சென்ற இந்த கோர யுத்தத்தின் பிடியில் சிக்குண்டு மீண்டு வந்த தாயகத்தின் உறவுகளும் புலம்பெயர் உறவுகளும் இந்த வலி மிகுந்த நாளை ஒவ்வொரு வருடமும் மே 18 அன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள மக்கள் அதிகமாக கூடும் பிரதான கடற்கரைகளில் ஒன்றான, பெசன்ட் நகர் கடற்கரையில் மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் வைகோ, மே 17 இயக்கத்தினுடைய தலைவர் திருமுருகன் காந்தி, ஓய்வு பெற்ற உயர் நீதிபதி மன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் மற்றும் தமிழின உணர்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.