Business

கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம்! நான்காக பிளவுப்பட்டுள்ள மொட்டுக் கட்சி

 

2024 ஆம் ஆண்டு ரணில் ஜனாதிபதி, பசில் ராஜபக்ச பிரதமர் என்ற நிலைப்பாட்டுக்குள் இருந்துக் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான தரப்பினர் செயற்படுகிறார்கள் என மேலவை இலங்கை கூட்டணியின் ஆலோசகரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள மேலவை இலங்கை கூட்டணி காரியாலயத்தில் நேற்று(14.05.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,“எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேசிய தேர்தல் தொடர்பில் ராஜபக்ச குடும்பத்துக்குள் நான்கு வேறுபட்ட நிலைப்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

முதலாவது தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும்,இரண்டாவது தரப்பினர் பசில் ராஜபக்சவுக்கும்,மூன்றாவது தரப்பினர் நாமல் ராஜபக்ச,மகிந்த ராஜபக்சவுக்கும்,நான்காவது தரப்பினர் பசில் ராஜபக்ச உட்பட நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பாடும் நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை களமிரக்கவும்,அதே ஆண்டு இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பசில் ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கவும் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது எவரும் அரசாங்கத்தை ஏற்க முன்வரவில்லை என ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது.

நாட்டு மக்கள் ராஜபகசர்களை முழுமையாக புறக்கணித்த பின்னணியில் ராஜபகசர்களை பாதுகாப்பதற்காக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

மக்களால் கடுமையாக வெறுக்கப்பட்ட ராஜபகசர்கள் மீண்டும் மக்கள் மத்தியில் செல்வதற்கான பாதுகாப்பான சூழலை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

நாடு ஏன் வங்குரோத்து நிலை அடைந்தது,பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்சர்களின் வகிபாகம் என்னவென்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஆகவே 2019 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் செய்த தவறை மக்கள் மீண்டும் செய்யமாட்டார்கள்.”என குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top