மெக்ஸிகோ நாட்டில் வேன் மற்றும் லொறி (Tractor-trailer) மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 27 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வடக்கு மெக்ஸிகோவில் Ciudad Victoria அருகே வேன் மற்றும் லொறி (Tractor-trailer) நேருக்கு நேர் மோதியது. இதனால் சில நிமிடங்களில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.
இந்த கோர விபத்தில் 27 பேர் பலியாகினர். அவர்களில் 24 பேர் வேனுக்குள் எரிந்த நிலையில் காணப்பட்டனர். மேலும் ஒரு பெண்ணும், குழந்தையும் அவர்களது வாகனத்தின் அருகே இறந்து கிடந்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து பொலிஸார் தெரிவிக்கவில்லை. எனினும் லொறியின் சாரதி தப்பியோடியதாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் பலியானவர்கள் அனைவரும் தெற்கு மாநிலமான வெராக்ரூஸ் மாநிலத்தில் வசித்தவர்கள் என்று EL Pais செய்தித்தாள் கூறியுள்ளது.
ஆனால் உயிரிழந்தவர்களின் பெயர்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. வழக்கறிஞர் அலுவலக வட்டாரம் கூறும்போது, பாதிக்கப்பட்ட அனைவரும் மெக்ஸிகோ நாட்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் அடையாள ஆவணங்களை புலனாய்வாளர்கள் மீட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் வடக்கு மாநிலமான நியூவோ லியோனில் கால்வாயில் பிக்கப் டிரக் விழுந்ததில் 14 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.