காசா நகரின் பல பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
1 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மார்ச் முதல் வாரத்தில் முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் உள்ளது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு எதிராக புதிதாக தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த சூழலில், காசா நகரில் உள்ள பல பகுதிகளில் இருந்து வெளியேறும்படி மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டு உள்ளது. அவர்களை தெற்கு பகுதிக்கு செல்லும்படி கூறியுள்ளது.
இதன்படி, ஜெய்தவுன், டெல் அல்-ஹவா மற்றும் பக்கத்திலுள்ள பிற நகரங்களில் உள்ள மக்களையும் வெளியேறி விடும்படி இஸ்ரேல் கூறியுள்ளது. 17 மாத கால போரின் பகுதியாக, இந்த பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.