இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இன்று மாலை 5 மணி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது என்று விக்ரம் மிஸ்ரி அறிவித்து உள்ளார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாவாசிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் பதிலடியாக பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, கடந்த 6-ந்தேதி இரவில் தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்திற்கான சூழல் உருவானது. பாகிஸ்தான் தரப்பில் நடந்த தாக்குதல்களை இந்தியா தொடர்ந்து முறியடித்தது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டன. நேற்றிரவு முழுவதும் மத்தியஸ்தம் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. இதில், முழு அளவில் மற்றும் உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இரு நாடுகளும் ஒப்பு கொண்டு விட்டன என டிரம்ப் அறிவித்து உள்ளார்.
பொது அறிவு மற்றும் சிறந்த புத்திசாலித்தனம் ஆகியவற்றை பயன்படுத்தியதற்காக இரு நாடுகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த விவகாரத்தில் நீங்கள் கவனம் செலுத்தியதற்காக நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என அவர் பதிவிட்டு உள்ளார்.
இதேபோன்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது என இந்தியாவும் அறிவித்து உள்ளது. இதுபற்றி இந்தியாவின் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, இந்தியா-பாகிஸ்தான் இன்று மாலை 5 மணி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதனால், தரைவழி, வான்வழி மற்றும் கடல்வழியேயான போர்நிறுத்தம் அமலுக்கு வருகிறது.
இதற்காக, இரு தரப்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. ராணுவ நடவடிக்கைகளுக்கான இரு நாட்டு தளபதிகள் மீண்டும் மே 12-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, பாகிஸ்தான் ராணுவ இயக்குநர் ஜெனரல் இதுபற்றி இன்று பிற்பகல் 3.35 மணிக்கு தொலைபேசி வழியே பேசினார் என்றார். இதனால், இரு நாடுகளுக்கு இடையே கடந்த செவ்வாய் கிழமை இரவு தொடங்கிய போரானது இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்து இருக்கிறது. இதனால், இந்தியாவை சேர்ந்த 145 கோடி மக்களும், பாகிஸ்தானை சேர்ந்த 25 கோடி மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.