போரால் இடம்பெயர்ந்த பின்னர், சுய விருப்பின் பேரில் நாடு திரும்ப விரும்பும் அகதிகளை இலங்கைக்குக் கூட்டி வந்து இங்கு மீளக் குடியேற்றும் தனது செயன்முறையை இலங்கை அரசுத் தரப்பின் முறையற்ற கெடுபிடிப் போக்குக் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பான UNHCR (ஐ.நா. அகதிகள் தூதரகம்) நிறுத்தி வைத்துள்ளது.
மீளழைத்து வரப்படும் தமிழ் அகதிகள் இலங்கைக்கு வந்தவுடன் கைது செய்யப்படலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலைமை காணப்படுவதால் இலங்கைத் தமிழ் அகதிகளை நாட்டுக்குக் கூட்டிவரும் செயன்முறையை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் தூதரகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு வந்தவுடன் குடிவரவுச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறைந்தது நான்கு அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என வந்த தகவல்கள் காரணமாக, ஓகஸ்ட் 14, 2025 அன்று திருச்சியிலிருந்து கொழும்புக்கு ஏழு அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டம் கடைசி நிமிடத்தில் இரத்துச் செய்யப்பட்டது.
அதிகாரபூர்வ வட்டாரங்களின்படி, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் தூதரகத்தால் திருப்பி அனுப்பப்பட்ட ஃப்ரீமேன் ரிச்சர்ட் வேல்வவந்தரம் (வயது54), ஓகஸ்ட் 12, 2025 அன்று கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியதும் கைது செய்யப்பட்டார்.
அவர் பின்னர் ஒரு நீதிவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும், திருப்பி அனுப்பும் ஆவணங்களை மதிப்பாய்வு செய்ததில் அவர் திரும்பி வருவது தொடர்பான எந்த முன் பாதுகாப்பு கவலைகளும் இல்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல், மே 28, 2025 அன்று, உள்நாட்டுப் போரின் போது பல தசாப்தங்களுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறிய மற்றொரு தமிழ் அகதி யாழ்ப்பாணத்தில் தரையிறங்கிய பிறகு கைது செய்யப்பட்டார்.
ஓகஸ்ட் முதல் வாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் தூதரகத்தின் உதவியின்றி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய தமிழ்த் தம்பதியினரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஜோடி 1996 முதல் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்ததாகக் கூறப்படுகின்றது. வந்தவுடன், அவர்கள் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தாமாக முன்வந்து நாடு திரும்பும் அகதிகளைச் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை அதிகாரிகள் கைது செய்வது இதுவே முதல் முறை.
தாமாக முன்வந்து நாடு திரும்பும் அகதிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதே அடிப்படைக் கொள்கை.
ஒரு குற்றவியல் வழக்கு நிலுவையில் இல்லாவிட்டால் கைதுகள் செய்யப்படாது. இன மோதலில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சத்தில் அகதிகள் நாட்டை விட்டு வெளியேறியமையால் குடியேற்றச் சட்டங்களை மீறுவது மன்னிக்கப்படுகின்றது என்று திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்ட ஒரு மூத்த இந்திய அதிகாரி தெரிவித்தார்.
மேற்கோள் காட்ட விரும்பாத அதிகாரி, இந்தப் பிரச்சினை இராஜதந்திர வழிகளில் எடுத்துக் கொள்ளப்படுவதாகக் கூறினார்.
அகதிகள் குடியேற்ற விதிகளை மீறியமைக்காகக் கைது செய்யப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவார்கள் என்றும், இலங்கை அதிகாரிகளிடமிருந்து உத்தரவாதம் கிடைக்கும் வரை, நாடு திரும்பும் செயல்முறை நிறுத்தி வைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.