உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை முற்றாக நிராகரித்து சர்வதேச நீதிப் பொறிமுறையே வேண்டும் என வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் நிறைவில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கான மனு ஒன்றை ஐ.நாவின் யாழ். அலுவலகத்தில் கையளித்துள்ளனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை முற்றாக நிராகரித்து சர்வதேச நீதிப் பொறிமுறையைக் கோருகின்றோம்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம், உலகளவில் அதிக எண்ணிக்கையிலான காணாமல் போனவர்களைக் கொண்ட ஒரு நாட்டில் நீதிக்கான எங்கள் போராட்டத்தில் உறுதியாக இருந்து வருகின்றோம்.
இந்தச் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், நீதியை நிலைநாட்டுமாறு சர்வதேச சமூகத்தை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கின்றோம்.
வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது உலகளவில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் முழு மக்களுக்கும் எதிரான ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகின்றது.
ஈழத்தைப் பொறுத்தவரையில், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கவில்லை. எமது உரிமைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டே இலங்கை அரசானது ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக் கருவியாக இதனைப் பாவித்து வந்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் உச்சக்கட்டத்தை அடைந்த இலங்கையின் இனப்படுகொலைப் போரின் இறுதிக் கட்டத்தில், ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்.
அவர்களது உறவினர்களால் இலங்கைப் பாதுகாப்புப் படையினரிடம் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒப்படைக்கப்பட்டுப் பலவந்தமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் ஒரு திட்டமிட்ட தந்திரோபாயமாக இலங்கையால் பலவந்தமாகக் காணாமல்போகச் செய்தல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இது இலங்கை அரசின் திட்டமிட்ட இன அழிப்பாகும்.
போரின் இறுதிக் கட்டத்தில், 59இற்கும் மேற்பட்ட குழந்தைகள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது எனச் சர்வதேசத்திடம் நீதி வேண்டி தொடர்ந்து போராடி வருகின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.