கம்போடியாவில் பஸ் ஒன்று பாலமொன்றில் மோதி ஆற்றில் விழுந்து நேற்று வியாழக்கிழமை (20) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 16 பேயணிகள் உயிரிழந்துள்ளதோடு, 20 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பிரசித்திப்பெற்ற அங்கோர் வாட் ஆலய வளாகத்தின் தாயகமான சீம் ரீப்பில் இருந்து தலைநகர் புனோம் பென் நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே மத்திய மாகாணமான கம்போங் தோமில் வியாழக்கிழமை (20) அதிகாலை பஸ் விபத்துக்குள்ளானதாக அப்பிராந்திய பிரதி பொலிஸ் அதிகாரி சிவ் சோவன்னா தெரிவித்துள்ளார்.

சாரதி தூக்க கலக்கத்தில் இருந்தமையே இந்த பஸ் விபத்து இடம்பெறுவதற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸில் 40 பயணிகள் இருந்ததாகவும், அந்த பயணிகள் அனைவரும் கம்போடியர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பஸ் ஆற்றிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
கம்போடியாவில் 2024 ஆம் ஆண்டில் இடம்பெற்ற விபத்துக்களில் 1,509 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, 2025 ஆம் ஆண்டில் ஒன்பது மாதங்களில் விபத்துக்களால் 1,062 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு பொதுப்பணி மற்றும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
