Business

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: 15பேர் பலி

 

 

ஆஸ்திரேலியாவின் பாண்டை கடற்கரையில் யூத மதத்தினரின் ‘ஹனுக்கா’ எனும் பண்டிக்கை கொண்டாட்டம் நடந்த பகுதியில் புகுந்த இரு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில், 15 பேர் கொல்லப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவின் பிரபலமான சுற்றுலா தலம் பாண்டை கடற்கரை, அந்நாட்டின் முக்கிய நகரமான சிட்னிக்கு அருகில் உள்ளது. இன்று விடுமுறை தினம் மற்றும் யூத மதத்தினரின் முக்கிய பண்டிகையான ஹனுக்கா எனப்படும் ஒளியை கொண்டாடும் பண்டிகையின் முதல் நாள் என்பதால், கடற்கரையில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.

அப்போது, கடற்கரைக்கு கருப்பு உடையில் வந்த இரு நடுத்தர வயது நபர்கள், மிகப்பெரிய இயந்திர துப்பாக்கியை எடுத்து அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் துவங்கினர். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இரு பயங்கரவாதிகளும் 10 நிமிடங்களுக்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட முறை சுட்டனர். இதில் பொது மக்களில், 15 பேர் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து உடனடியாக அப்பகுதியை நியூ சவுத் வேல்ஸ் போலீஸ் படையினர் சுற்றி வளைத்தனர்.

போலீசார் மறைந்திருந்து பயங்கரவாதிகளை சுட முயற்சித்த நேரத்தில், பொது மக்களில் ஒருவர் துணிச்சலாக செயல்பட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே பதுங்கி சென்று, வெறும் கையால் பயங்கரவாதியை தாக்கி அவரது துப்பாக்கியை பிடுங்கி அடித்து விரட்டினார்.

பயங்கரவாதிகளை நோக்கி போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் சுடப்பட்டு பிடிக்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருவரும் பயங்கரவாதிகள் என போலீசார் உறுதிப்படுத்தினர். எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், எதற்கு தாக்குதல் நடத்தினர் என்ற விபரங்கள் விசாரணைக்கு பின்பே தெரியவரும் என்றனர்.

இதனிடையே துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த தந்தை – மகன் என்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த சஜீத் அக்தர் (வயது 50), அவரது மகன் நவீத் அக்தர் (வயது 24) ஆகிய 2 பயங்கரவாதிகளும் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதிகளில் சஜித் அக்தரை போலீசார் சுட்டுக்கொன்றனர். துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த மற்றொரு பயங்கரவாதி நவீத் அக்தர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். பாகிஸ்தானை சேர்ந்த சஜீத் அக்தர் ஆஸ்திரேலியாவில் பழக்கடை நடத்தி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது போனிரிக் பகுதியில் உள்ள அவனது வீட்டை கண்டுபிடித்துள்ள போலீசார், அங்கு சோதனை செய்து வருகின்றனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து சிறிது நேரத்தில் பிரதமர் அல்பனீஸ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “இது யூத ஆஸ்திரேலியர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல். மகிழ்ச்சியும், நம்பிக்கையும் நிறைந்த நாளாக இருக்க வேண்டிய ஹனுக்கா விழாவின் முதல் நாளை, பயங்கரவாதிகள் சிதைத்துள்ளனர். நம் நாட்டில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை. அதை ஒழித்துக் கட்டுவோம்,” என்றார்.

 

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top