Business

சென்னைக்கும் வரும் பறக்கும் டாக்ஸி – இனி 2 மணி நேர பயணம் 8 நிமிடத்தில்

சென்னைக்கு ஏராளமான நிறுவனங்கள் படையெடுத்து வரும் நிலையில், அதற்கு ஏற்றது போல மக்கள் தொகை பெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் விரைவில் சென்னைக்கு பறக்கும் டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சென்னை ஐஐடி ஆதரவுடன் இயங்கி வரும் ePlane நிறுவனம் தமிழ்நாட்டில் பறக்கும் டாக்ஸி சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

e200x என பெயரிடப்பட்டுள்ள இந்த டாக்ஸியின் மாதிரி, டெல்லியில் இந்தியா AI இம்பாக்ட் உச்சி மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது.

சென்னைக்கும் வரும் பறக்கும் டாக்ஸி - இனி 2 மணி நேர பயணம் 8 நிமிடத்தில் | 36 Km In 8 Minutes Chennai To Get Eplane Air Taxi

என்விடியாவின் ஆம்னிவர்ஸ் தளத்தைப் பயன்படுத்தி விமானத்தின் மிகவும் விரிவான டிஜிட்டல் இரட்டையை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இது உண்மையான டாக்ஸி புறப்படுவதற்கு முன்பு மெய்நிகர் உலகில் இயற்பியல், சென்சார்கள் மற்றும் அவசரகால சூழ்நிலைகளை சோதிக்க அனுமதிக்கிறது.

கேமராக்கள் மற்றும் ரேடார்களில் இருந்து தரவை செயலாக்க, டாக்ஸி பாதுகாப்பான, நிகழ்நேர முடிவுகளை எடுக்க உதவும் வகையில், நிறுவனம் என்விடியாவின் கணினி தளத்தையும் பயன்படுத்தும்.

இந்த டாக்சிகள் பறக்க தொடங்குவதற்கு, விமானத்தை போல் நீண்ட தூர ஓடுதளம் தேவையில்லை. இருக்கும் இடத்தில இருந்தே செங்குத்தாக மேலே எழும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் வணிக வளாகங்கள் அல்லது தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் மேல்தளத்தில் கூட ஹெலிபேட் போல, வெர்டிபோர்டு அமைக்க முடியும்.

இது முழுக்க மின்சார பேட்டரியில் இயங்குவதால், சுற்றுசூழலுக்கு உகந்தது மற்றும் 120 டெசிபல்களுக்குக் குறைவான ஒலியையே உருவாக்கும்.

சென்னை விமான நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், ஆலந்தூர் மெட்ரோ, சோழிங்கநல்லூர் சந்திப்பு, சிறுசேரி சிப்காட், தரமணி, நந்தனம், சென்ட்ரல், உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் இதற்கான வெர்டிபோர்ட்டுகள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பறக்கும் டாக்சி, 36 கிமீ தூரத்தை 8 நிமிடங்களில் கடக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் 2 மணி நேர சாலை பயண நேரம் 8 நிமிடங்களாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாலையில் ஊபர், ஓலா போன்ற தனியார் நிறுவனங்கள் மூலம் பயணிக்கும் போது ரூ.1,000 செலவாகும் நிலையில், இதன் மூலம் பயணிக்க ரூ.1700 செலவாகும் என கூறப்படுகிறது.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள முன்மாதிரி விமானி உட்பட 3 பேர் அமரக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் 19 இருக்கைகள் வரை கொண்ட விமானங்களை உருவாக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கும் வரும் பறக்கும் டாக்ஸி - இனி 2 மணி நேர பயணம் 8 நிமிடத்தில் | 36 Km In 8 Minutes Chennai To Get Eplane Air Taxi

இந்த டாக்ஸியின் வணிக நடவடிக்கைகள் 2027 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக ஆம்புலன்ஸ் சேவையாக சென்னை, பெங்களூரு, புனே, மும்பை மற்றும் அகமதாபாத்தில் தொடங்கப்பட உள்ளது. அதன் பின்னர் சரக்கு போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து என படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top