ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனிக்கு பின் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் எவரையும், தாம் தொடர்ச்சியாக இலக்கு வைப்போம் என இஸ்ரேல் இராணுவம் ஞாயிற்றுக்கிழமை (08) பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தின் பார்சி மொழி சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவொன்றில், ஈரானின் புதிய உச்ச தலைவரைத் தெரிவு செய்யும் பொறுப்பைக் கொண்ட ‘நிபுணர்கள் சபை’ குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாகக் கூட்டப்படாத இந்தச் சபையானது, விரைவில் ஈரானின் புனித நகரான ‘கோம்’ நகரில் கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
“இஸ்ரேல் அரசின் கரங்கள் ஈரானின் அடுத்த வாரிசையும், அந்த வாரிசை நியமிக்க முற்படும் ஒவ்வொரு நபரையும் தொடர்ந்து பின்தொடரும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். இந்த வாரிசு தெரிவு கூட்டத்தில் பங்கேற்க உத்தேசித்துள்ள அனைவரையும் எச்சரிக்கிறோம்; உங்களை இலக்கு வைக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம். இது ஒரு எச்சரிக்கை!” என இஸ்ரேல் இராணுவம் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான் தாக்குதல்களில் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, காமேனியின் மகனான மொஜ்தபா காமேனி அடுத்த தலைவராக நியமிக்கப்படலாம் எனப் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேல் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளது.
