இலங்கை மின்சார சபையின் மின் விநியோக இணைப்புக்களில் ஏற்பட்ட அதிகூடிய மின் அழுத்தத்தினால் நேற்று முன்தினம் (21.11.2016) நவாலிப் பகுதியில் பல வீடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான மின்சார மற்றும் இலத்திரனியல் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் நவாலி தெற்குப் பகுதியில் பல வீடுகளில் மின் அழுத்தம் சடுதியாக 400 வோல்ற் வரை அதிகரித்துள்ளது. இதனால் வீடுகளில் பாவித்துக் கொண்டிருந்த மின்குமிழ்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கணனிகள், மடிக்கணனிகள் போன்றன வெடித்து சிதறியதுடன் வேறுபல மின் உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. இவ்வாறு 25க்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்த மின் உபகரணங்களும் இலத்திரனியல் பொருட்களும் நாசமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் வீடுகளுக்கான மின்னிணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் குறித்த பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டிருந்தது.
நள்ளிரவில் அப்பகுதிக்கு வந்து நவாலி சின்னக் கதிர்காம ஆலயத்துக்கு அருகிலிருந்த மின்மாற்றியில் மின்சார சபையினர் திருத்த வேலைகளை மேற்கொண்டனர். அத்துடன் காலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட வீடுகளிலும் திருத்த வேலைகளை மேற்கொண்டனர். இதனால் காலையில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது. இவ்வாறு சடுதியாக மின் அழுத்தம் கூடியமைக்கான காரணம் தெரிய வராதபோதும் இவ்வாறு பெருந்தொகையான சொத்துக்கள் அழிவடைந்தமைக்கு மின்சார சபையினரின் செயற்பாடுகள்தான் காரணம் என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.