ஈராக்கில் மூக்கில் ரத்தம் வடிய வைக்கும் விசித்திர காய்ச்சல் அதிகரித்து வருகிறது. ஈராக், ஈராக்கில் மூக்கு வழியாக ரத்தம் வடிய செய்யும் புதுவித காய்ச்சலுக்கு பலரும் பலியாகி வருவது உலக நாடுகளை மீண்டும் அலற வைத்துள்ளது
இந்நிலையில், இந்தியாவிற்குள் மீண்டும் இந்த நோய் பரவும் அச்சம் எழுந்துள்ளது. மற்ற வைரஸ் தொற்றுகளை போல இந்த வைரஸ் தொற்றின் பிறப்பிடமும் ஆப்பிரிக்கா தான். அதனால் தான் இந்த வைரசுக்கு காங்கோ காய்ச்சல் என்று கூறுகிறார்கள். 43 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஈராக்கிற்குள் நுழைந்துவிட்டது. ஆனால் இன்றோ, நோய் பாதிப்புக்கு ஆளாகும் ஐந்து பேரில் இருவர் உயிரிழப்பது தான் பீதியை அதிகரித்துள்ளது.
ஆடுகளும், மாடுகளும் ஒரு வித உண்ணி தாக்குதலுக்கு ஆளாகும் போது, அந்த உண்ணி மூலமும், இறைச்சிக்காக ஆடுகள் வெட்டப்படும் போதும், விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களும் இந்த காய்ச்சல் பாதிப்பிற்கு எளிதில் ஆளாகி விடுகின்றனர். காய்ச்சலோடு வாந்தியுடன் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் ரத்தக்கசிவும் ஏற்படுகிறது. அத்துடன், மூக்கில் இருந்து விடாமல் ரத்தம் வெளியேறச்செய்து பாதிக்கப்பட்டவரை உயிரிழக்கச்செய்கிறது.
தற்போது 33 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்படுவது இளம் வயதினரை கூடுதலாக எச்சரிக்கிறது. உடலில் ரத்தக்கசிவை ஏற்படுத்தக்கூடிய இந்த காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வரும் நிலையில், ரிபாவிரின் என்ற வைரஸ் தடுப்பு மருந்து சற்று சிகிச்சை பலன் தருவது ஆறுதலை தருகிறது.
பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து உண்ணிகளை கொல்வதே இந்த காய்ச்சலை கட்டுப்படுத்தும் முக்கிய கருவியாக உள்ளது. இந்தியாவில் குஜராத் உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த வைரஸ் காய்ச்சல் முன்பு காணப்பட்டாலும், கடந்த சில ஆண்டுகளாக இதனை இந்தியாவிற்குள் கண்டறியப்படவில்லை.
மனித வாழ்க்கையே சவாலாகி வரும் இந்த காலகட்டத்தில் சுத்தமும் சுகாதாரமும் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர்ந்து செயல்பட்டாலே போதும். நம் உயிரை நாம் காத்துக்கொள்ளலாம்.