துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கனடா மத்திய அரசாங்கம் புதிய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
கனேடியர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது கனடா அரசாங்கத்தின் முன்னுரிமையாகும். துப்பாக்கி வன்முறையால் கனேடியர்கள் கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது. அதனால்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1,500 வகையான இராணுவ பாணி தாக்குதல் துப்பாக்கிகளை நாங்கள் தடை செய்தோம் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கூறினார்.
துப்பாக்கிகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், தவறானவர்கள் கைகளில் இருந்து துப்பாக்கிகளைப் பறிக்கவும் எங்கள் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டங்களை வலுப்படுத்தினோம். இந்த நடவடிக்கைகள் நமது குழந்தைகளையும் சமூகங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றன.
இவ்வாறான நிலையில் கனடாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தவும், துப்பாக்கி வன்முறையில் இருந்து கனேடியர்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று அறிவித்தார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படும் C-21 40 சட்டமூலம் மேலும் சில வலுவான துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்வைக்கிறது.
புதிதாக வாங்கிய கைத்துப்பாக்கிகளை நபர்கள் கனடாவிற்கு கொண்டு வருவதையும், நாட்டிற்குள் கைத்துப்பாக்கிகளை வாங்குவது, விற்பது மற்றும் கைமாற்றுவதையும் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் புதிய சட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், வன்முறைகளில் ஈடுபடுபவர்களின் துப்பாக்கி உரிமங்களை புதிய சட்டத்தின் கீழ் பறித்தல் செய்யப்படும்.
துப்பாக்கிகளை கடத்தி வருதல், இரகசியமாக மறைத்து வைத்துப் பயன்படுத்துதல் போன்ற செயல்களின் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையிலும் புதிய சட்டத்திருத்தம் அமையும்.
இதேவேளை, புதிய சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுவதற்காக மத்திய அரசு 6.6 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யும் எனவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
பொலிஸார், துப்பாக்கி வன்முறையில் பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பங்கள், மருத்துவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கடுமையான துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மத்திய அரசிடம் வலியுறுத்தி வலுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய சட்டத்தை செயற்படுத்துவதற்கு மாகாணங்கள், பிரதேசங்கள், பழங்குடி சமூகங்கள் மற்றும் நகராட்சிகளுடன் இணைந்து கனடா அரசாங்கம் பணியாற்றும். கனடாவை பாதுகாப்பான நாடாக உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா – தெற்கு டெக்சாஸில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலைக்குள் கடந்த 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை புகுந்த ஆயுததாரி ஒருவர் 19பாடசாலை சிறுவர்கள், ஆசிரியர் உள்ளிட்ட 21பேரை கொடூரமாக சுட்டுக் கொன்றார்.
இந்தச் சம்பவம் உலகெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இது உலகெங்கும் துப்பாக்கி வன்முறைக் கலாச்சாரம் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரொரண்டோவில் பாடசாலை ஒன்றுக்கு மிக அருகில் துப்பாக்கியுடன் நடமாடிய நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வாறான அச்சங்களுக்கு மத்தியிலேயே துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கனடா மத்திய அரசாங்கம் புதிய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.