News

நீதி கிடைக்கும் வரை போராடிக் கொண்டே இருப்போம் : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

 

 

“எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம்” என்று காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் தெரிவித்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

எமக்கான நீதியை அரசாங்கம் வழங்கவில்லை

“எமது உறவுகளின் உண்மை நிலையை வலியுறுத்தி 13 வருடங்களாக நாம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எனினும் எமக்கான நீதியினை எந்த அரசாங்கமும் வழங்கவில்லை.

அரசு மீது நம்பிக்கை இழந்த நாம் சர்வதேசத்திடம் எமக்கான நீதியை வேண்டி தொடர்ச்சியாக போராடி வருகின்றோம். எமது உறவுகளை தருமாறே நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம்.

 

நாம் வேறு எதனையும் இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்கவில்லை. எனவே எமக்கான நீதி ஒன்று கிடைக்கும் வரையில் நாம் இந்த போராட்டங்களை இடை நிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுப்போம். எமது பிரச்சினையை தீர்ப்பதற்கு இனியாவது சர்வதேசம் முன்வர வேண்டும்” என்றனர்.

 

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றையதினம் (30) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது.

முல்லைத்தீவில் தொடரும் தொடர் போராட்டத்தின் 1906 நாளான இன்று இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுள்ளது.

 

“உள்நாட்டுப்பொறிமுறைகள் மீது நம்பிக்கை இல்லை, சர்வதேச பொறுப்புக்கூறலையும் நீதியையும் மட்டுமே நாங்கள் கோருகின்றோம்” என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டமானது இன்று மாலை 03 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.

“போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் omp ஒரு கண்துடைப்பு நாடகம்” , “இராணுவத்திடம் ஒப்படிக்கப்பட்ட உறவுகள் எங்கே” “தண்டனைக்கு விலக்களிக்கும் கலாசாரம் இலங்கையில் தொடர்கிறது”,“எமக்கு வேண்டும் சர்வதேச நீதி விசாரணை” போன்ற கோஷங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பல புலனாய்வாளர்கள் பிரசன்னமாகியிருந்தனர் எனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top