அமெரிக்காவில் வீட்டில் நடந்த கேளிக்கை விருந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாசாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளிக்கூடத்திற்குள் நுழந்த நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள், 2 ஆசிரியைகள் என மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் மிசோரி மகாணம் ஜெஸ்டர்பிள்ட் நகரின் ரிட்ச்மவுண்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு கேளிக்கை விருந்து நடைபெற்றது. அப்போது, அந்த விருந்து நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.