அவுஸ்திரேலியாவில், சுமார் 4 வருடங்களுக்கும் மேலாக தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் புகலிட கோரிக்கையாளர்களான பிரியா – நடேசன் குடும்பத்தினர் இறுதியாக குயின்ஸ்லாந்தின் மத்திய நகரான பிலோயலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பிரியா, அவரது கணவர் நடேசலிங்கம் மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது மகள்களான கோபிகா (6), மற்றும் தர்ணிகா(4) ஆகியோர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் பிலோயலாவை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு சென்ற நடேஸ்- பிரியா தம்பதியர் , அங்கு தங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டதுடன், மெல்போர்னிலிருந்து கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர்.
"Me and my family are very happy to start our journey back to my community in Bilo. Thank you to all [of you people in] Perth, thanks. Love you Perth." – Priya Nadesaslingam. #HomeToBilo pic.twitter.com/HEkCKJjjQR
— HometoBilo (@HometoBilo) June 8, 2022
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, குடிவரவு தடுப்புமுகாமிற்கு கொண்டுசெல்லப்பட்ட பிரியா-நடேஸ் குடும்பம் தொடர்ச்சியாக சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவந்தனர்.
நாடு கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், மேன்முறையீட்டு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டதால் நாடு கடத்தும் முயற்சிகள் தடுக்கப்பட்டு வந்தன. 2018 மார்ச் முதல் இக்குடும்பத்தினர் மெல்பேர்ன் நகரில் உள்ள குடியேற்றவாசிகளுக்கான தடுப்பு முகாமில் ஒன்றரை வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் அவர்களை பெர்த்தில் உள்ள சமூக காவலுக்கு மாற்றும் வரை, அவர்கள் இரண்டு ஆண்டுகள் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.
லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிரியா-நடேஸ் குடும்பம் Biloela-இல் வாழ அனுமதிக்கப்படுவர் என வாக்குறுதியளித்ததற்கிணங்க, இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு இக்குடும்பத்தின் விடுதலைக்காக தொடர்ச்சியாகப் போராடிய Home to Bilo அங்கத்தவர்கள் கோரியிருந்த பின்னணியில், லேபர் அரசு அண்மையில் இதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.
இதற்கேற்ப பிரியா -நடேஸ் குடும்பத்தினருக்கு bridging விசாவும் வழங்கப்பட்டுள்ளது.பிரியா குடும்பத்தை மீண்டும் Biloela-வுக்கு கொண்டு வருவதையிட்டு தான் மிகவும் பெருமைப்படுவதாக பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார்.