News

உக்ரைனுக்கு அதிநவீன ஆளில்லா தாக்குதல் விமானங்களை விற்க அமெரிக்கா திட்டம்

 

 

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனின் பயன்பாட்டிற்காக ஹெல்பயர் ஏவுகணைகள் (Hellfire missiles) உள்ளிட்ட ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தக்கூடிய நவீன ரக நான்கு ஆளில்லா விமானங்களை (MQ-1C Gray Eagle drones) விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக இது குறித்த விடயங்களை நன்கறிந்த 3 அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆளில்லா விமானங்களை விற்பனை செய்யும் திட்டத்தை ஜோ பைடன் நிர்வாகம் கொண்டுள்ள போதும், அமெரிக்கா காங்கிரஸ் ஒப்புதலை இதற்காக பெற வேண்டியுள்ளது. பைடன் நிர்வாகத்தின் இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் தடை போடக்கூடிய சாத்தியங்களும் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு நீண்ட தூர அதிநவீன ஏவுகணை அமைப்புகளை அனுப்பவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்த சில நாட்களில் அதிநவீன ஆளில்லா தாக்குதல் விமானங்களை விற்கும் அமெரிக்காவின் திட்டம் வெளியாகியுள்ளது.

இந்த வகை ஆளில்லா தாக்குதல் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து உக்ரைன் பெற்றால் அது போரில் உக்ரைனுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்த வகை ஆளில்லா விமானங்கள் அதன் பணியைப் பொறுத்து 30 அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் வரை பறக்கக்கூடியவை. அத்துடன், இவற்றைப் பயன்படுத்தி உளவுத்துறை நோக்கங்களுக்காக அதிக அளவு தரவுகளை சேகரிக்க முடியும். ஒரே நேரத்தில் எட்டு வரையான சக்திவாய்ந்த ஹெல்பயர் ஏவுகணைகளை எடுத்துச் சென்று தாக்குதல் நடத்தும் திறனையும் இந்த வகை ஆளில்லா விமானங்கள் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top