உக்ரைன் நிலப்பரப்பில் 20 சதவீத பகுதி ரஷியாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது – உக்ரைன் அதிபர் வேதனை
உக்ரைன் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக உக்ரைன் அதிபர் இன்று தெரிவித்தார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 100 நாட்களை கடந்துள்ளது. ரஷியாவை ஒட்டியிருக்கும் கிழக்கு உக்ரைன் பகுதிகளில் போர் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், ஐரோப்பிய நாடான லக்சம்பர்க்கில் நடைபெற்ற சட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- உக்ரைனின் 20 சதவீத நிலபரப்பை ரஷியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதாவது, உக்ரைனின் கிரிமியன் தீபகற்பம் மற்றும் ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் உள்பட எங்கள் நாட்டின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
மேலும், உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ரஷ்யப் படைகள் தங்கள் பிடியை இறுக்கி வருகின்றன. அவர்கள் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும், வடகிழக்கு பகுதிகளிலிருந்தும் பின்வாங்கியுள்ளனர். அதேவேளையில், உக்ரைனின் கிழக்கு தொழில்துறை பகுதிகளில் தங்கள் தாக்குதலில் கவனம் செலுத்தியுள்ளனர்.
2014 இல், ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் மற்றும் ரஷ்ய இராணுவம் மொத்தம் 43,000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதியை ஆக்கிரமித்திருந்தன. ஆனால், கடந்த 3 மாத கால போருக்கு பின், கிட்டத்தட்ட 1,25,000 சதுர கிலோ மீட்டராக ரஷியாவின் ஆக்கிரமிப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்போது நடைபெற்று வரும் போரால், மேலே குறிப்பிட்டதை விட இரண்டு மடங்கு அதிகமான பரப்பளவு, அதாவது கிட்டத்தட்ட 3,00,000 சதுர கி.மீ. பகுதிகளில் கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் நிரம்பியுள்ளன, புதைக்கப்பட்டுள்ளன, அந்த பகுதிகள் மாசுபடுத்தப்பட்டுள்ளன.
உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கையால், 1 கோடியே 20 லட்சம் உக்ரேனியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்