உள்ளூர் நேரப்படி நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு மாகாணம் முழுவதும் வாக்கெடுப்பு முடிவடைந்து முற்போக்கு கன்சர்வேடிவ் தலைவர் டக் போர்ட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 124 தொகுதிகளைக் கொண்ட மாகாண சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆட்சி அமைக்க 63 இடங்கள் தேவை என்ற நிலையில் கன்சர்வேடிவ் கட்சி தற்போதுவரை 70 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை உறுதி செய்துள்ளது. அத்துடன், 13 இடங்களில் அக்கட்சி முன்னிலையில் உள்ளது.
ஆண்ட்ரியா ஹோர்வத் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி ஒன்ராறியோவில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சி ஆகியுள்ளது. என்.டி.பி. இதுவரை 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 9 இடங்களில் முன்னணியில் உள்ளது.
மத்தியில் ஆளும் லிபரல் கட்சி 8 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. அதேநேரம் பசுமைக் கட்சி ஒரு இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
கன்சர்வேடிவ் முதல்வர் வேட்பாளர் டக் போர்ட் மற்றும் என்.டி.பி. தலைவர் ஆண்ட்ரியா ஹோர்வத் ஆகிய இருவரும் முறையே எட்டோபிகோக் நோர்த் மற்றும் ஹாமில்டன் மத்தியில் வெற்றி பெற்று மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் லிபரல் தலைவர் ஸ்டீவன் டெல் டுகா, வாகன்-வுட்ரிட்ஜில் போட்டியிட்ட நிலையில் தோல்வியடைந்தார்.
ஒன்ராறியோ தோ்தல் குறித்த முற்கூட்டிய கருத்துக் கணிப்புக்களின் பிரகாரம் பல மாதங்களாக போர்ட் முன்னணியில் இருந்து வந்தார்.
57 வயதான டக் போர்ட், ரொரண்டோவில் நகர சபை உறுப்பினராக எட்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு 2018இல் மாகாண அரசியலில் நுழைந்தார்.
தனது முதல் தேர்தலில் கேத்லீன் வைனை வெளியேற்றி, மாகாணத்தில் லிபரல் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.