அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்துவதற்கான சட்ட மசோதா, நாடாளுமன்ற கீழ்சபையில் நிறைவேறியது.
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதிலும் கடந்த மாதம் நியூயார்க் பப்பல்லோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேரும், டெக்சாஸ் உவால்டே பள்ளிக்கூட துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேரும் கொல்லப்பட்ட கொடூர சம்பவங்கள், அந்த நாட்டை உலுக்கின.
துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன், நாடாளுமன்றத்தை கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த ஏற்ற விதத்தில் பகுதியளவு தானியங்கி துப்பாக்கிகளை வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.
இந்த மசோதா, 15 ரவுண்டுக்கு மேற்பட்ட தோட்டாக்கள் கொண்ட உறையை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கிறது. இந்த மசோதா விவாதத்துக்கு பின்னர் நேற்று முன்தினம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 223 வாக்குகள் பதிவாகின. எதிராக 204 ஓட்டுகள் விழுந்தன. எதிர்ப்பு ஓட்டுகளை விட ஆதரவு வாக்குகள் அதிகம் என்பதால் மசோதா நிறைவேறியது.
ஆனால் மனநலத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பை அதிகரித்தல், பின்னணி சோதனைகளை மேம்படுத்துதல் ஆகியவை தொடர்பான விவாதத்தை செனட் சபை தொடர்வதால் இந்த மசோதா சட்டமாக மாற வாய்ப்பு இல்லை என்று வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது பற்றி ஜனநாயக கட்சி எம்.பி. வெரோனிக்கா எஸ்கோபார் கூறும்போது, “நாம் ஒவ்வொரு உயிரையும் பாதுகாத்து விட முடியாது. ஆனால், அதற்காக முயற்சி செய்ய வேண்டாமா? அமெரிக்கா சொல்வதை நாங்கள் கேட்கிறோம். நடவடிக்கை எடுக்கிறோம். இதில் இருந்து உங்களுடன் இருப்பது யார், உங்களுடன் யார் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்” என குறிப்பிட்டார்.
இந்த மசோதா செனட் சபையில் (மேல்சபையில்) நிறைவேறுவதற்கு குடியரசு கட்சியின் 10 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இதற்கிடையே ஒரு டஜன் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி எம்பி.க்கள் சந்தித்து பேசி உள்ளனர். இந்த வார இறுதிக்குள் சமரச சட்டத்துக்கான கட்டமைப்பை ஏற்படுத்தும் நம்பிக்கையில் அவர்கள் பேசியதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இன்னும் அதிகமான பேச்சு தேவைப்படுவதாக பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
21 வயதுக்கு உட்டபட்டவர்களுக்கு பகுதியளவு தானியங்கி துப்பாக்கிகளை விற்பனை செய்வதற்கு கலிபோர்னியா மாகாணம் தடை விதித்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கடந்த மாதம் அமெரிக்க அப்பீல் கோர்ட்டு கூறியதை குடியரசு கட்சியினர் கட்டிக்காட்டுகின்றனர். எனவே இந்த மசோதா, குடியரசு கட்சியினருடைய ஆதரவை பெற்று செனட் சபையில் நிறைவேறி சட்டமாகுமா என்பது கேள்விக்குறிதான்.