தேர்தல் நடாத்தும் நிலையில் நாடு இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
21ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்யுமாறு கோரப்பட்டு வருவதாகவும், இதனை செய்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போதைய சூழ்நிலையில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல்களை நடாத்துவதற்கு முன்னதாக நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே அரசாங்கத்தின் முதன்மைக் கடமை. கடந்த அரசாங்கம் சர்வதேச பிணை முறிகளில் முதலீடு செய்வதற்கு எடுத்த தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தேவையற்ற அபிவிருத்தி திட்டங்களினாலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தேவையின்றி அபிவிருத் திட்டங்களுக்கு செலவிட்ட பணத்தை, பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முதலீடு செய்திருக்க வேண்டுமெனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.