வங்கதேசத்தில் இரசாயன சேமிப்புக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இதுவரை 38 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்தில் 300 இற்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ள நிலையில், மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் முக்கிய துறைமுகமான சிட்டகாங் பகுதிக்கு வெளியே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள உள்நாட்டு சேமிப்புக் கிடங்கில் சனிக்கிழமை நள்ளிரவு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
30 ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த தனியார் கிடங்கில் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட இரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவந்ததை அடுத்து பொலிஸார், தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் தன்னார்வலர்கள் விரைந்து பல மணி நேரம் போராடிய பின்னர் தீயைக் கட்டுக்குள் கொண்டுள்ளனர்.
இதில் தீயணைப்பு வீரர்கள் உட்பட சுமார் 300 பேர் படுகாயமடைந்த நிலையில், பலி எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் காயங்களுடன் தப்பிய பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் 40 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 10 பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.