News

ரஷிய கல்லூரிகள், பல்கலை கழகங்கள் மீது தடை; உக்ரைன் அதிபர் அறிவிப்பு

 

 

ரஷியாவின் 236 கல்லூரிகள், பல்கலை கழகங்கள் மற்றும் 261 கல்லூரி தலைவர்கள் மீது தடைகள் விதிக்கப்படுகின்றன என உக்ரைனிய அதிபர் தெரிவித்து உள்ளார்.

கீவ், உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 107வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.

இந்த போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் பல நாடுகள் முயற்சித்த போதும் அவை தோல்வியில் முடிந்தன.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதனால், உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

இந்த சூழலில் உக்ரைனிய அதிபர் விடுத்துள்ள செய்தியில், ரஷியாவின் 236 கல்லூரிகள், பல்கலை கழகங்கள் மற்றும் 261 கல்லூரி தலைவர்கள் மீது தடைகள் விதிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர, 236 ரஷிய உயர் கல்வி மையங்களுடனான கலாசார பரிமாற்றங்கள், அறிவியல் ஒத்துழைப்பு, கல்வி மற்றும் விளையாட்டு தொடர்புகள் மற்றும் பொழுதுபோக்கு செயல்கள் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்படுகின்றன. இதனை உக்ரைனிய அதிபரின் வலைதள தகவல் தெரிவிக்கின்றது.

இதன்படி, லொமனோசோவ் மாநில பல்கலை கழகம், பவுமன் மாஸ்கோ மாநில தொழில்நுட்ப பல்கலை கழகம் (எம்.ஜி.டி.யூ.), எச்.எஸ்.இ. பல்கலை கழகம், தேசிய பொருளாதாரம் மற்றும் பொது நிர்வாகத்தின் ரஷ்ய ஜனாதிபதி அகாடமி மற்றும் செச்சினோவ் மாஸ்கோ மாநில மருத்துவ பல்கலை கழகம் ஆகியவை தடை விதிக்கப்பட்ட பட்டியலில் அடங்கும். இதேபோன்று, இந்த தடைகளானது காலவரையின்றி விதிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top