News

வடகொரியாவில் கொரோனா நிலைமை மோசம்: உலக சுகாதார அமைப்பு தகவலால் பதற்றம்

 

 

வடகொரியாவில் கொரோனா நிலைமை மோசமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இந்த தகவல் உலக அரங்கில் பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.

வடகொரியாவில் கடந்த மாதம் 12-ந் தேதி கொரோனா வைரஸ் தொற்று பரவலை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் முதன்முதலாக ஒப்புக்கொண்டார். அந்த நாட்டில் ஊரடங்கு பொதுமுடக்கத்தை அறிவித்தார்.

கொரோனா தடுப்பூசியோ, சிகிச்சைகளோ வந்திராத அந்த நாட்டில் சுகாதார கட்டமைப்பும் வலுவாக இல்லை. இதனால் அங்கு தினந்தோறும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டு வந்தன.

தற்போது அங்கு தினசரி பாதிப்பு 1 லட்சத்துக்கு கீழே வந்துள்ளதாகவும், தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் அரசு கூறுகிறது. ஆனால் அந்த நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்பான உண்மையான தகவல்கள் வெளியாவதில்லை என்று சர்வதேச சமூகம் கருதுகிறது. தகவல்கள் மறைக்கப்படுவதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதையொட்டி உலக சுகாதார அமைப்பின் அவசரகால பிரிவின் தலைவர் டாக்டர் மைக் ரேயான் கூறியதாவது:- கொரோனா தொற்று பாதிப்பு குறித்த கூடுதல் தகவல்களை வடகொரிய அதிகாரிகள் வழங்க வேண்டும். அங்கு இருந்து தரவுகளை பெறுவதில் எங்களுக்கு உண்மையிலேயே சிக்கல்கள் இருக்கின்றன. அங்கு களத்தில் உள்ள உண்மையான நிலைமை பற்றி தகவல்கள் இல்லை. எங்களிடம் போதுமான தரவுகள் இல்லாதபோது, நாங்கள் உலகத்துக்கு சரியான பகுப்பாய்வைத் தர முடியாது .

வடகொரியாவுக்கு தொழில்நுட்ப உதவிகளையும், தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றின் வினியோகங்களையும் தர உலக சுகாதார அமைப்பு பல முறை முன் வந்துள்ளது. குறைந்தது 3 முறை அவ்வாறு முன் வந்தோம். வெளிப்படையான அணுகுமுறை வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறோம். அப்போதுதான் நாங்கள் வடகொரிய மக்களுக்கு உதவிகளை செய்ய முடியும். ஏனென்றால் இப்போது எங்களால் அங்கு உள்ள கள நிலைமைகளை, இடர் மதிப்பீடு செய்யக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு அண்டை நாடுகளான சீனா, தென்கொரியாவுடன் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம் என்று அவர் கூறினார்.

வடகொரியாவில் கொரோனா நிலைமை மோசமாக உள்ளது. அந்த நாடு கூறுவதுபோல கொரோனா கட்டுப்படுத்தப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு நம்புகிறது. வடகொரியாவில் இப்போது கொரோனா நிலைமை மோசமாக உள்ளது என்று கூறுகிற உலக சுகாதார அமைப்பு, சீனா ஆரம்ப கட்டத்தில் தகவல்களை பகிராததை தவறு என கண்டு பொதுவெளியில் சுட்டிக்காட்ட வில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top