உக்ரைன் கிழக்கு – டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள உக்ரைனின் ஆயுத கிடங்கை நவீன ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த ஆயுதக் கிடங்கில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் இருந்ததாகவும் அவை அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
உக்ரைனில் டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள முக்கிய தொழில் நகரமான செவிரோடொனெட்ஸ்க் நகரில் உக்கிர சண்டை நடைபெற்று வருகிறது.
செவிரோடொனெட்ஸ்க் கிட்டத்தட்ட ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. எனினும் இந்த நகரின் ஒரு சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள உக்ரைன் படைகள் நகரை முழுமையாக மீட்டெடுக்க ரஷ்ய படைகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன.
ரஷ்யப் படைகள் மூலோபாய கிழக்கு நகரத்தை கைப்பற்றி வருவதால், செவிரோடொனெட்ஸ்க்கான போரில் உயிரிழப்புக்கள் அதிகமாக இருக்கும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
டான்பாசுக்கான போர் சந்தேகத்திற்கு இடமின்றி ஐரோப்பாவின் இராணுவ வரலாற்றில் மிகவும் வன்முறையான போர்களில் ஒன்றாக நினைவுகூரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தப் பகுதியில் தினமும் 100 முதல் 200 வரையான உக்ரேனிய படைகள் உயிரிழப்பதாக உக்ரைன் தகவல்கள் தெரிவிக்கின்றன.