உக்ரைனில் இதுவரை 300க்கும் மேற்பட்ட தேவாலயங்கள், பாரம்பரிய தளங்கள் ரஷிய துருப்புக்களால் அழிக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் போர் 100 நாட்களை கடந்தும் முடியாத தொடர்கதையாக உள்ளது. உக்ரைனில் தலைநகரை பிடிக்க முடியாத சூழ்நிலையில், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி போர் நிலவரம் குறித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, “உக்ரைனில் இதுவரை 300க்கும் மேற்பட்ட தேவாலயங்கள், பாரம்பரிய தளங்கள் ரஷிய துருப்புக்களால் அழிக்கப்பட்டுள்ளன. ரஷ்ய பீரங்கிகள் நாடு முழுவதும் 200 பாரம்பரிய இடங்களையும், 113க்கும் மேற்பட்ட தேவாலயங்களையும் அழித்துள்ளன. அவ்வாறு தகர்க்கப்பட்ட டஜன் கணக்கான தேவாலயங்களில், இரண்டாம் உலகப் போரில் நாஜி படைகளை எதிர்த்து நின்ற தேவாலயங்களும் அடங்கும்.
அதே போல, சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குப் பிறகு கட்டப்பட்ட தேவாலயங்களும் அடங்கும். 1991க்குப் பிறகு கட்டப்பட்டவைகளும் உள்ளன. இரண்டாம் உலகப் போரை தாங்கி, கடந்து நின்ற பழம்பெரும் தேவாலயங்களால், ரஷிய தாக்குதலை தாங்கி நிற்க முடியவில்லை” என்று கூறினார்.
மேலும், கிழக்கு உக்ரைனில் ஸ்வியாடோகிர்ஸ்க் லாவ்ராவில் உள்ள பழமையான மடாலயத்தில் தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு 300 அகதிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், 60 குழந்தைகள் உள்ளிட்டோர் தங்கி இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
அங்கு தீப்பற்றி எரிய காரணம், ரஷிய படைகளின் தாக்குதல்தான் என்று உக்ரைன் ராணுவ அதிகாரி யூரி கோசேவெங்கோ ‘பேஸ்புக்’ பதிவில் தெரிவித்துள்ளார். எரியும் மடாலயத்தின் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.