ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் (28-07-2022) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடும் நபர்களை அடக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உத்தியோகபூர்வ குழுக்கள் மற்றும் உத்தியோகபூர்வமற்ற குழுக்களை பயன்படுத்தி தற்போது அடக்குமுறை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் செயற்பட்டாளராக இருந்த தானிஸ் அலி சகோதரரை கைது செய்துள்ளனர். தானிஸ் அலிக்கு வெளிநாடு செல்ல உரிமை இருக்கின்றது.
குடிவரவு, குடியகலவு சட்டத்திற்கு அமைய பயண அனுமதி பெற்று விமானத்தில் ஏறிய பின்னர், விமானத்திற்குள் சி.ஐ.டி எனக் கூறிக்கொண்டவர்கள், போக்குவரத்து பொலிஸாருடன் சென்று தானிஸ் அலியை கைது செய்தனர்.
கைது செய்யும் இந்த நடைமுறை என்ன என்பதே எமக்குள்ள பிரச்சினை. இது கைது அல்ல அரசாங்கத்திற்கு எதிராக கதைப்பவர்களை அடக்குவது கடத்திச் செல்லும் நடவடிக்கை என்பதை நாங்கள் மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கிறோம்
களனில் மாணவர்கள் விடுதிக்கு எதிரில் தினமும் அதிகாலையில் வெள்ளை வான் வந்து சுற்றி திரிக்கின்றது. எதற்கு வெள்ளை வான். இது என்ன கலாசாரம் எனவும் வசந்த முதலிகே கேள்வி எழுப்பியுள்ளார்.