கொழும்பு – காலி முகத்திடலில் அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது படைத்தரப்பினப்பினரைப் பயன்படுத்தி வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்கள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக எங்களுக்குச் செய்திகள் வருகின்றன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கை அதிகாரிகள் உடனடியாக இந்த வன்முறை நடவடிக்கைகளை கைவிட வேண்டும். சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெற்காசிய பிரிவு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் ஊடகவியலாளர்கள் சம்பவ இடத்தில் தமது கடமைகளை செய்வதைத் தடுக்க கூடாது. இவ்வாறு செய்வது ஊடக சுதந்திரத்தை நேரடியாக மீறும் செயல் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.