இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை சமாளிக்க இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்பும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவதால், அதனை கட்டுப்படுத்த இந்திய அரசு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை சமாளிக்க இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்பும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு பதில் அளிக்கும் விதமாக இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தகைய செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு பொருந்தக்கூடியவை அல்ல என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கை மக்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கிறது என்றும், அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, ஜனநாயக முறைப்படியும் விழுமியங்களின் அடிப்படையிலும் தங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை ஆதரிக்கிறது என்றும் இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று கூறியதை இலங்கைக்கான இந்திய தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் இந்த அறிவிப்பு இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கிறது.