இலங்கையில் இடம்பெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்!
இலங்கையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களில் அடையாளம் காணப்பட்ட சகல கைவிரல் ரேகை பதிவுகளையும் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள கைவிரல் ரேகையின் உரிமையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றையதினம் (27-07-2022) டுபாய் செல்லத் தயாராக இருந்த விமானத்திற்குள் நுழைந்த குற்றத்தடுப்பு பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்திருந்தனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டம் எனும் பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது எனவும், அவர்களுக்கு அரச வேலையும் கிடையாது என்றும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், வன்முறைகளில் ஈடுபட்ட பலரது கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டு அவை விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல முடியாது, அதுமட்டுமல்லாது அரச தொழில் உட்பட தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவும் முடியாதென தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.