Canada

கனடா பழங்குடி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் போப் பிரான்சிஸ்

 

கனடாவில் கத்தோலிக்க திருச்சபைகளால் நடத்தப்பட்ட குடியிருப்பு பள்ளிகளில் பழங்குடியின சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார்.

கனடாவின் எட்மண்டன் அருகே உள்ள மாஸ்க்வாசிஸ் – செவன் சோரோஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் கூடியிருந்த சுமார் 2.000 வரையான பழங்குடி சமூகத்தினர் மத்தியில் போப்பாண்டவர் மன்னிப்பு கோரினார்.

உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்பாண்டவர் பிரான்சிஸ் 6 நாட்கள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு கனடா சென்றடைந்தார்.

கனடா வந்திறங்கிய அவரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆளுநர் நாயகம் மேரி சைமன், பழங்குடி மக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

கனடாவில் குடியிருப்புப் பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகள் அனுபவித்த துஷ்பிரயோகங்களுக்காக ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் சார்பாக பகிரங்க மன்னிப்பு கோருவதே போப் பிரான்சிஸின் இந்தப் பயணத்தின் நோக்கமாக இருந்தது.

கனடாவில் பல தசாப்தங்களாக நீடித்த குடியிருப்பு பள்ளி முறைமையின் கீழ் கலாசார இனப்படுகொலை இடம்பெற்றதாக 2015 ஆம் ஆண்டில், கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிவித்தது.

1870 முதல் 1990 களுக்கும் இடையில், 150,000 -க்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள் குடியிருப்புப் பள்ளிகளில் இணைய கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்தப் பள்ளிகள் தேவாலயங்களால் நடத்தப்பட்டன. பழங்குடி குழந்தைகளை வெள்ளை கனேடிய சமுதாயத்தில் வலுக்கட்டாயமாக இணைப்பதை நோக்கமாகக் கொண்டு இவ்வாறான பள்ளிகள் செயற்பட்டன.

குழந்தைகள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, பழங்குடியின மக்களின் மொழிகளைப் பேச முடியாது தடை ஏற்படுத்தப்பட்டது. மேலும் இங்கு இணைக்கப்பட்ட குழந்தைகள் பலவிதமான உடல், உளவியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுத்தனர்.

கனடாவின் முன்னாள் குடியிருப்பு பள்ளி வளாகங்களில் ஆயிரக்கணக்கான பழங்குடிச் சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டன. இது இந்த விவகாரத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த அநீதிகள் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கோர வேண்டும் என்ற கோரிக்கைகள் கனடாவில் வலுவடைந்து வந்தன.

இந்த விவகாரத்தில் போப்பாண்டவர் மன்னிப்புக் கோர வேண்டும் என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வும் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையிலேயே கனடாவில் கத்தோலிக்க திருச்சபைகளால் நடத்தப்பட்ட குடியிருப்பு பள்ளிகளில் பழங்குடியின சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக கனடா வந்துள்ள போப் பிரான்சிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினாா்.

கனடாவின் எட்மண்டன் அருகே உள்ள மாஸ்க்வாசிஸ் – செவன் சோரோஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் கூடியிருந்த சுமார் 2.000 வரையான பழங்குடி சமூகத்தினர் மத்தியில் கனடாவின் தவறான குடியிருப்புப் பள்ளி அமைப்பில் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கிற்காக ஆழமாக வருந்துகிறேன் என்று போர் பிரான்சிஸ் கூறியபோது, அங்கிருந்தவர்கள் உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் வடித்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top