கனடாவின் மிகப்பெரிய தொலைபேசி மற்றும் இணைய சேவை வழங்குநர்களின் ஒன்றான ரோஜர்ஸ் வலையமைப்பு (Rogers network) வெள்ளிக்கிழமை முதல் செயலிழந்துள்ளதால் மில்லியன் கணக்கானவர்கள் தொலைத்தொடர்பு மற்றும் வங்கி, போக்குவரத்து மற்றும் ஏனைய அரசாங்க சேவைகளை அணுக முடியாத நிலையில் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
இது வாடிக்கையாளர்களிடமிருந்து சீற்றத்தை ஏற்படுத்தியது மற்றும் ரோஜர்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் (RCIb.TO) தொழில் ஆதிக்கம் மீதான விமர்சனத்தை அதிகரித்தது.
ரோஜர்ஸ் வலையமைப்பு முடங்கியுள்ளதால் இணைய அணுகல், கைத்தொலைபேசி இணைப்புகள் மற்றும் நிலையான தொலைபேசி (landline phone ) இணைப்புகள் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன.
கனடா முழுவதும் ரோஜர்ஸ் வலையமைப்பு மூலம் சில அழைப்பாளர்களால் 911 அவசர சேவைகளை கூட அடைய முடியவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.
சில இடங்களில் ரோஜர்ஸ் வலையமைப்பின் சிக்னல்கள் மிக மோசமான நிலையில் இருந்ததால் சிக்னலை பெற வெளி இடங்களிலும், உயரமாக இடங்களிலும் கனேடியர்கள் சுற்றித் திரிந்தனர்.
ரோஜர்ஸ் வலையமைப்பு செயலிழந்துள்ளதால் கைத்தொலைபேசி செயலிகளையும் அணுகி சேவை பெற முடியாதுள்ளது. இணையவழி பணப்பரிமாற்றம் முடங்கியுள்ளது. வங்கிகளின் பணப்பரிமாற்ற இயந்திர சேவைகளிலும் (ATM services ) சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என கனடாவின் எல்லை சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரோஜர்ஸ் வலையமைப்பு செயலிழந்துள்ளதை அடுத்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. ரொரண்டோ பங்குச் சந்தையில் ரோஜர்ஸ் வலையமைப்பின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
செயலிழப்புக்கான காரணத்தை கண்டறிய முயன்று வருகிறோம். எப்போது சேவைகள் சீராகும்? என்பது பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிடுவது கடினம் என ரோஜர்ஸின் மூத்த துணைத் தலைவரான கை ப்ரிக் (Kye Prigg) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சைபர் தாக்குதலின் விளைவாக சேவைகள் செயலிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இந்த நெருக்கடிக்கு சைபர் தாக்குதல் காரணமாக உள்ளதாக நம்பவில்லை என கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோவின் செய்தித் தொடர்பாளர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தெரிவித்தார்.
ரோஜர்ஸ் தொலைத்தொடர்பு, இணைய வலையமைப்பு செயலிழந்துள்ளதால் கோடைகால விமான பயண சேவைகளின் முன்பதிவு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த 15 மாத இடைவெளியில் ரோஜர்ஸ் தொலைத்தொடர்பு, இணைய வலையமைப்பு முடங்குவது இது இரண்டாவது முறையாகும்.
சுமார் 10 மில்லியன் தந்தியற்ற இணைப்பு சந்தாதாரர்கள் (wireless subscribers) மற்றும் 2.25 மில்லியன் ஏனைய சந்தாதாரர்களுடன் ரோஜர்ஸ் கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான ஒன்டாரியோவில் சிறந்த தொலைத்தொடர்பு சேவை வழங்குநராக உள்ளது.
தற்போதைய இணைய, தொலைத்தொடர்பு செயலிழப்பு நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாதது என கனேடிய தொழில்துறை அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் தெரிவித்துள்ளார். ரோஜர்ஸ், பெல் மற்றும் டெலஸ் உள்ளிட்ட தொலைத்தொடர்பு தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் இதற்கான தீர்வு குறித்து பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனேடிய நிதி நிறுவனங்கள் மற்றும் டொராண்டோ-டொமினியன் வங்கி (TD.TO) மற்றும் மொன்றியல் வங்கி (Bank Of Montreal) உள்ளிட்ட வங்கிகள் இந்த இணைய முடக்கத்தால் தங்கள் சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தன. தனது இயந்திர பணப்பரிமாற்ற சேவைகள், இணைய வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடா றோயல் வங்கி (Royal Bank of Canada) தெரிவித்துள்ளது.