News

கறுப்பு ஜூலை: தமிழ் மக்கள் சந்தித்த இருண்ட நாட்கள் மீண்டும் நினைவு கூரப்படுகிறது – ந.ஸ்ரீகாந்தா

 

39 வருடங்களிற்கு முன்னர், 1983ம் ஆண்டில், இதே யூலை மாதத்தில் இலங்கைத் தமிழ் மக்கள் சந்தித்த இருண்ட நாட்கள் மீண்டும் ஒரு முறை இப்போது நினைவு கூரப்படுகின்றன என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலை நினைவு நாள் தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

“83ம் ஆண்டு யூலை மாதம் 23ம் திகதி நள்ளிரவில், யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நிகழ்த்தப்பட்ட குண்டுத் தாக்குதலை அடுத்து, தமிழ் மக்கள் மீது அன்றைய ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கத்தினால் அரச பயங்கரவாதம் முழு மூச்சுடன் ஏவிவிடப்பட்டது.

குண்டுத் தாக்குதலில் பலியான 13 ராணுவ சிப்பாய்களின் மரணத்தை பயன்படுத்தி, முன்கூட்டியே தீட்டப்பட்டிருந்த திட்டத்தின் பிரகாரம், யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டு, கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மையம் கொண்டு, தென் இலங்கை மற்றும் மலையகத்தை உள்ளடக்கி, தமிழ் மக்கள் மீது பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் தொடுக்கப்பட்டு, பெரும் புயலாக விஸ்வரூபம் எடுத்தது.

பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கொலையுண்டனர், கொள்ளை மற்றும் தீ வைப்புக்களில் பாரிய சொத்தழிப்பு ஏற்படுத்தப்பட்டது. பாலியல் வன்கொடுமைகள் ஏராளமாக நிகழ்த்தப்பட்டன.

தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை

யூலை 25 மற்றும் 27ம் திகதிகளில் வெலிக்கடைச் சிறையில் மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.

உலகின் கவனத்தை உடனடியாகவே ஈர்த்த இந்த கறுப்பு யூலை நாட்கள் இந்திராகாந்தி தலைமையிலான அன்றைய இந்திய அரசாங்கம் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நேரடியாக தலையிடுவதற்கு வழியமைத்தன.

ஈழத் தமிழரின் தாயகத்திற்கு விடுதலை கோரி நின்ற ஆயுதப் போராட்டத்திற்கு கறுப்பு யூலை மாபெரும் உத்வேகத்தை கொடுத்தது.

தமிழர்களின் மக்களின் விடுதலை வேட்கை

இதன் பின் நிகழ்ந்தவை எல்லாம் நீண்ட வரலாறு. இருந்தும், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள், 39 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னமும் இலட்சியக் கனவாகவே நிலைத்து நிற்கின்றன. எமது மக்களின் விடுதலை வேட்கை நீறு பூத்த நெருப்பாகவே நீடிக்கின்றது.

இந்த நிலையில், கறுப்பு யூலை நாட்களில் காவு கொள்ளப்பட்ட பல்லாயிரக் கணக்கான எமது உறவுகள் அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதோடு, அவர்களின் விடுதலைக் கனவை நனவாக்க தொடர்ந்து செயற்பட நாம் அனைவரும் மீண்டும் உறுதி எடுத்துக் கொள்வோம் என வேண்டி நிற்கின்றோம்” என அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டடுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top