காட்டுத்தீ ஒரே நாளில் இரட்டிப்பு… ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்: அவசரநிலை பிரகடனம்
மேற்கு அமெரிக்காவை மொத்தமாக காட்டுத்தீ விழுங்கிவரும் நிலையில், கலிபோர்னியாவில் யோசெமிட்டி தேசிய பூங்கா சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் 6,000க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
கடுமையான வரட்சி மற்றும் வெப்ப அலை காரணமாக மிக ஆபத்தான வகையில் காட்டுத்தீ வியாபித்து வருகிறது. கலிபோர்னியாவில் மொத்தம் 12,000 ஏக்கர் காடுகள் தீக்கிரையாகியுள்ளதை அடுத்து மாரிபோசா கவுண்டியில் ஆளுநர் கவின் நியூசோம் சனிக்கிழமை அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார்.
இதனிடையே, 400க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஹெலிகொப்டர்கள், பிற விமானங்கள் மற்றும் புல்டோசர்களைப் பயன்படுத்தி கலிபோர்னியாவில் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
சனிக்கிழமை பகல் வெளியான தகவலில், காட்டுத்தீக்கு 10 குடியிருப்புகளும் வணிக வளாகங்களும் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், மேலும் 2,000 கட்டிடங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காட்டுத்தீயால் முக்கிய சாலைகள் பல மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 37,774 காட்டுத்தீ பதிவாகியுள்ளது. இதனால் 5.5 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.
சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், மொத்தம் 15 அமெரிக்க மாகாணங்களில் 95 இடங்களில் காட்டுத்தீ கொழுந்துவிட்டெரிகிறது. இதனால் 2.26 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பு தீயால் சூழப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.