காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள் மீது இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் போராட்டக்காரர்கள் உட்பட 50 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
அத்துடன், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இராணுவத்தினரால் பி.பி.சி. ஊடகவியலாளர் உட்பட பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள காலி முகத்திடலில் இன்று அதிகாலை 2 மணிக்கு நுழைந்த பொலிஸாரும் படையினரும் வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை பலவந்தமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
ஜனாதிபதி செயலகத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சில கூடாரங்கள் மற்றும் கட்டமைப்புகளை பாதுகாப்பு படையினர் அடித்துடைத்து, அகற்றியதுடன் பலரைக் கைது செய்துள்ளனர்.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்று பொறுப்பேற்ற 24 மணித்தியாலங்களுக்குள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது அரச படைகள் வன்முறைகளை பிரயோகித்து வருகின்றன.
அதிகாலை 2.00 மணியளவில் படையினர் போராட்ட களத்திற்குள் நுழைந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அவர்கள் மூர்க்கத்தனமாக அகற்றினர். செவிப்புலன் பாதிக்கப்பட்டவர்கள், மாற்று வலுவுடைய முன்னாள் படையினருடன் கூட அவர்கள் மிக மோசமாக நடந்து கொண்டனர். பலரைச் சரமாரியாக தாக்கினர். இவற்றைப் பதிவு செய்ய முயன்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.