கொழும்பு – காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இன்று அதிகாலை படைத்தரப்பை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டு, போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டமை குறித்து சர்வதேச நாடுகள் கரிசனை வெளிப்படுத்தியுள்ளன.
அமெரிக்கா
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நள்ளிரவில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கான உடனடி அனுமதியை வழங்க வேண்டும் எனவும் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.
கனடா
காலி முகத்திடல் போராட்ட களத்தில் ஏன் இப்படி நடக்கிறது? என்று தெரியவில்லை. அதிகாரிகள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். வன்முறையைத் தவிர்ப்பது முக்கியம் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா
காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இருந்து வரும் செய்திகள் குறித்து மிகவும் கவலை அடைகிறேன். அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹுல்டன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையின் தற்போதைய மாற்றத்திற்கு கருத்துச் சுதந்திரம் அவசியமானது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் கருத்துச் சுதந்திரத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவது எப்படி உதவும்? என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் வெளியிட்டுள்ள ருவிட்டரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.