News

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது கை வைத்ததன் எதிரொலி! ரணில் அரசுக்கு சர்வதேச நாணய நிதியம் கொடுத்த அதிர்ச்சி

 

 

 

 

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து இலங்கை அரசாங்கத்திற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் தனது முடிவை அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்டில் இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருந்தது.

எனினும் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடுவது பின்தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைதியான போராட்டங்கள், வன்முறையாக மாறியமையே இந்த தாமதத்துக்கான காரணம் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,”போராட்டங்கள் காரணமாக, கடந்த வாரம் இலங்கைக்கு பயணம் செய்யவிருந்த உலக உணவு திட்டத்தின் தலைவர், தனது பயணத்தை ஒரு மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.

இலங்கையில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதன் காரணமாக, கிளர்ச்சியாளர்களை விரும்பாத நிலையில், இலங்கையர்களுக்கு கிடைக்கவேண்டிய தொழில் வாய்ப்புக்கள் கிடைக்காமல் போயுள்ளன. அவை ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

எனவே இன்று இலங்கைக்கு அரசியல் ஸ்திரத்தன்மையும் சமாதானமுமே தேவை. கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்கள் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முனைந்தால், அவர்கள் நிராயுதப்படுத்தப்படுவார்கள்.

இதேவேளை அரசியலமைப்பு சீர்திருத்தங்களை கொண்டு வந்து எதிர்வரும் புதன்கிழமை அரசியலமைப்பின் 22 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்படும்.

அத்துடன் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்” என கூறியுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற நிலையில், மறுநாள் காலையில் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் மற்றும் பொலிஸார் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியது.

இதன்போது பலர் காயமடைந்திருந்தனர். சர்வதேச ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதல் தொடர்பில் சர்வதேச நாடுகள் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருந்ததுடன், இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால் ஜப்பான் தனது அனைத்து உதவிகளையும் வழங்காமல் நிறுத்தும் என்று ஜனாதிபதி ரணிலிடம் நேரடியாக அதன் தூதுவர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அமெரிக்க தூதுவரும் தனது கண்டனத்தை உடனடியாக வெளியிட்டிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top