இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை போர்க் குற்றங்களுக்காக உடனடியாக கைது செய்யுமாறு கோரி தென் ஆபிரிக்காவின் மனித உரிமைகள் சட்டத்தரணி மற்றும் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் முன்னாள் நிபுணர் யஸ்மின் சூக்கா தலைமையிலான, சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் (ITJP) சட்டத்தரணிகள், சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்ற முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜீலை 13 ஆம் திகதி நாட்டைவிட்டு வெளியேறி சிங்கப்பூரில் தங்கியிருந்த நிலையிலே இந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
கோட்டாபய மீதுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டங்களின் சட்டத்தரணிகள் சங்கம் 63 பக்கங்களைக் கொண்ட அறிக்கையினை சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.
இலங்கையில், 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது ஜெனிவா ஒப்பந்தங்களை கடுமையாக மீறினார். இந்த மீறலானது, சிங்கப்பூரின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட குற்றங்கள் என்று முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது ஜெனிவா உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச குற்றவியல் சட்டங்களை கோட்டாபய ராஜபக்ச கடுமையாக மீறினார்.
இதில் கொலை, மரணதண்டனை, சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதை, பாலியல் வன்புணர்வு மற்றும் பிற பாலியல் வன்முறைகள், சுதந்திரத்தை பறித்தல், கடுமையான உடல் மற்றும் மனநல பாதிப்பு மற்றும் பட்டினி ஆகியவை அடங்கும் என்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் (ITJP) சட்டத்தரணிகள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.