News

சம்பந்தனுக்கு பகிரங்க அழைப்பை விடுத்த ஜனாதிபதி ரணில்!

 

 

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickremesinghe) செயற்பாடுகளைக் கொஞ்சம் பொறுத்துப் பார்த்து அதன் அடிப்படையில் முடிவுகளை எடுத்து எங்களால் இயன்றதைச் செய்வோம்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (R.Sampanthan) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு பதவியேற்றுள்ளார்.

தன்னுடன் இணைந்து செயற்படத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்றிரவு சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்பதற்கு முன்பதாகப் பல விடயங்கள் பற்றிப் பேசியுள்ளார்.

நாட்டின் பல தேசிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி இடைக்கால அரசை நிறுவவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டினுடைய பொருளாதார நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

நாடு செயற்பட முடியாத நிலைமை ஏற்படுவதற்கு முன்பதாக சாதகமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அவற்றைப் புதிய ஜனாதிபதி செய்வார் என்று நான் நம்புகின்றேன்.

தமிழ்த் தேசியப் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. புதிய ஜனாதிபதி இதற்கு முன்பதாக முற்போக்குச் சக்திகளுடன் சேர்ந்து தமிழ்த் தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

தற்போது அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவருடன் இருப்பவர்கள் அரசியல் தீர்வு விடயம் குறித்து கரிசனை செலுத்துவார்களா என்பதை நாங்கள் கொஞ்சம் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.

எனவே, நாங்கள் பொறுத்துப் பார்த்து அவர்களின் செயற்பாட்டின் அடிப்படையில் முடிவுகளை எடுத்து எங்களால் இயன்றதைச் செய்வோம்” – என்றார்..

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top