ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகஅரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் சற்று முன்னர் படையினரால் கலைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கோட்டாகம என பெயரிட்டு தமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்திருந்தனர்.
குறித்து போராட்டம் தீவிரமடைந்திருந்த நிலையில், கடந்த 14ம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகியிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் நாட்டின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றிருந்தார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பது சட்டவிரோதமான செயலாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
அத்துடன், அவ்வாறான சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
திடீரென வந்த ஆயுதம் தாங்கிய படையினர்
இதன்படி, போராட்டக்காரர்கள் தமது ‘கோ-ஹோம்-ரணில்’ போராட்டத்தை, தடையின்றி நடத்துவதற்காக கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவினை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதன்படி, அலரிமாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
எனினும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையிலேயே, இன்று நள்ளிரவு ஜனாதிபதி செயலக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு திடீரென வந்த ஆயுதம் தாங்கிய படையினர் அந்த இடத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றியுள்ளனர். அத்துடன், அங்கிருந்த கூடாரங்களையும் அப்புறப்படுத்தியுள்ளனர்.
மேலும், போராட்டகளத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியாக இன்றைய தினம் பதவியேற்றிருந்த ரணில் விக்ரமசிங்க தனது முதல் விஜயமாக பாதுகாப்பு தலைமையகத்திற்கு சென்றிருந்தார். அங்கு பாதுகாப்பு செயலாளர், படைத்தளபதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களிடம் கலந்துரையாடியிருந்தார்.
இவ்வாறான பின்னணியிலேயே, தற்போது காலி முகத்திடல் போராட்டகாரர்கள் அங்கிருந்த வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.