உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது, அது மொத்த உலக நாடுகளையும் பாதிக்கும் என பலரும் எண்ணிக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்.
ஆனால், உண்மையாகவே உக்ரைன் போரின் தாக்கம் பல நாடுகளை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
உலகத்தை ஒரு சமுதாயம் எனலாம். காரணம், ஒவ்வொரு நாடும் அதன் ஏதாவது ஒரு தேவைக்காக மற்றொரு நாட்டைச் சார்ந்திருக்கிறது. எண்ணெய்க்காக ஒரு நாட்டை, உணவு தானியங்களுக்காக ஒரு நாட்டை, உரத்துக்காக ஒரு நாட்டை, சுற்றுலாப்பயணிகளுக்காக மற்ற நாடுகளை, என ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டை நம்பித்தான் இருக்கவேண்டியிருக்கிறது.
அப்படி இல்லை என்றால், என்ன ஆகும் என்பதை இப்போது எல்லாரும் நன்கு உணர்ந்துவிட்டோம்…
ஆம், உதாரணமாக ரஷ்யா பல நாடுகளுக்கு எரிவாயு விற்பனை செய்கிறது. இப்போது ஜேர்மனியை எடுத்துக்கொள்ளலாம். ஜேர்மனி தன் எரிவாயுத் தேவைக்காக ரஷ்யாவை நம்பியிருக்கிறது.
ரஷ்ய நிறுவனமான Gazprom, தனது Nord Stream 1 திட்டத்தின் கீழ், குழாய் மூலம் ஜேர்மனிக்கு எரிவாயு அனுப்பிவந்தது. தற்போது, எரிவாயு வழங்கும் அமைப்பில் உள்ள ஒரு இயந்திரம் பழுதாகிவிட்டதால், அது அந்த இயந்திரத்தை சரி செய்ய கனடாவின் உதவியை நாடுகிறது ரஷ்யா. பழுது நீக்குவதற்காக ரஷ்ய நிறுவனமான Gazprom, கனடாவிலுள்ள Siemens Canada என்ற நிறுவனத்திடம் அந்த இயந்திரத்தைக் கொடுத்துள்ளது.
இப்போது கனடா அந்த இயந்திரத்தை சரி செய்து ரஷ்யாவுக்குக் கொடுத்தால்தான், ஜேர்மனிக்கு எரிவாயு கிடைக்கும்.
ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யா மீது பல நாடுகள் தடை விதித்துள்ளன. அவற்றில் கனடாவும் ஒன்று. ரஷ்யா மீது தடை விதித்துள்ளதால், கனடா அந்த இயந்திரத்தை ரஷ்யாவுக்குத் திருப்பிக் கொடுக்கக்கூடாது, அப்படிக் கொடுத்தால் அது தடைகளை மீறும் செயலாகும் என எதிர்ப்பு தெரிவிக்கிறார் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.
ஆனால், அந்த இயந்திரத்தைக் கொடுக்காவிட்டாலோ, ஜேர்மனிக்கு எரிவாயு கிடைக்காது. ஆக, கனடா இக்கட்டான ஒரு சூழலுக்குள்ளாகியிருக்கிறது.
இந்நிலையில், தடைகளை மீறி, அந்த இயந்திரத்தை ரஷ்யாவுக்குத் திருப்பிக் கொடுப்பது என கனடா அரசு முடிவு செய்துள்ளது.
அந்த இயந்திரத்தைப் பழுது நீக்கி, ரஷ்ய எரிவாயு நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுக்க, Siemens Canada நிறுவனத்துக்கு கனடா அரசு குறிப்பிட்ட காலத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம் என்ற நிபந்தனையின் பேரிலேயே அந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, அந்த இயந்திரத்தைத் திருப்பிக் கொடுக்கும் முடிவு கடினமான ஒன்றுதான் என்றும், ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய கூட்டாளர் நாடுகள் எரிவாயு பற்றாக்குறையால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ள நிலையில், அரசாங்கங்களுக்காக மட்டும் அல்ல, மக்களுக்காக, அவர்கள் தொடர்ந்து உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை பெருமளவில் அளிக்கவேண்டும் என்பதற்காக அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.