இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட நாடாவிய ரீதியில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்ட “கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம்” என அடையாளப்படுத்தப்படும் வன்முறைகள் அரங்கேற்றப்பட்ட 39 ஆவது நினைவு தினம் இன்றாகும்.
இந்த வன்முறைகள் மூலம் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களை சிங்கள காடையர்கள் பலியெடுத்ததுடன், கொழும்பு – வெலிகடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்களும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் கடந்த 1983 ஆம் ஆண்டு 23 ஆம் திகதி இரவு 11.30 அளவில் சிறிலங்கா இராணுவத்தினர் பயணித்த வாகனமொன்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 13 சிப்பாய்கள் சம்பவ இடத்திலும், மேலும் இருவர் வைத்தியசாலையிலும் உயிரிழந்த சம்பவத்தை காரணமாக கொண்டு நாடாவிய ரீதியில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட வன்முறை
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இராணுவ சிப்பாய்களின் சடலங்களை கொழும்பு – பொரள்ளை மயானத்தில் நல்லடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்த நிலையில், பொரள்ளை பகுதிக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வருகைத் தந்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பிலும் தாக்குதல் நடத்த வருகை தந்துள்ளதாக வதந்திகள் பரவிய பின்னணியில், சிறியளவில் ஏற்பட்ட வன்முறை நாடு தழுவிய ரீதியில் விரிவாக்கம் அடைந்திருருந்தது.
திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக இந்தக் கறுப்பு ஜுலை வன்முறைகள் அமைந்துள்ளதாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாதிடும் தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொழும்பு மற்றும் தென் பிராந்தியங்களில் உள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்ற சிங்கள காடையர்கள், தமிழர்கள் மீது தேடித் தேடி தாக்குதல் நடத்தியது மாத்திரம் அன்றி, அவர்களை உயிருடன் எரித்துக்கொலை செய்திருந்தனர்.
கொழும்பு – வெலிகடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் மீது பல தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், 1983 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்களுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது.
1983 ஆம் ஆண்டு தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்ட பின்னணியில், பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர்.
இலங்கையில் தமது சொத்துக்களை, சொந்தங்களை இழந்த பலர் இன்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதுடன், இந்த கலவரங்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளும் தமிழர்கள் புலம்பெயர்ந்துவாழும் தேசங்களில் இடம்பெற்றுள்ளன.