News

பாகிஸ்தானில் திருமண விருந்தினர்களுடன் ஆற்றில் கவிழ்ந்த படகு; 50 பேர் பலி என அச்சம்

பாகிஸ்தானில் திருமண விருந்தினர்களை சுமந்து சென்ற படகு இந்துஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 50 பேர் வரை உயிரிழந்து இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டம் மச்கே பகுதியை சேர்ந்த பலர் கிரோர் கிராமத்தில் ராஜன்பூர் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இரண்டு படகுகளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

இதில் ஒரு படகில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். அந்த படகு இந்துஸ் ஆற்றில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண எல்லையில் பயணித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத வகையில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படகில் பயணித்த 100 பேரும் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்புக்குழுவினர் ஆற்றில்அடித்துச்செல்லப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த படகு விபத்தில் 19 பெண்கள் உயிரிழந்துள்ளனர் என முதல்கட்ட தகவல் தெரிவித்தது. அவர்களின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்த பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்த நிலையில், 48 மணிநேரம் ஆகியும் மற்றவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், உயிரிழப்பு 50 ஆக உயர கூடும் என அஞ்சப்படுகிறது

. அதிக அளவிலான மக்களை படகில் ஏற்றியது, நீரின் ஓட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த விபத்தில், ஒரே குடும்பத்தின் 8 பேர் அவர்களது உறவினர்களுடன் உயிரிழந்து உள்ளனர்.

அதிக சுமையுடன் சென்ற படகில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பெருமளவில் நீரில் மூழ்கியுள்ளனர். தொடக்க கட்ட முயற்சிகளில் ஆண்கள் மட்டுமே மீட்கப்பட்டனர் என மணமகனின் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

சிந்த் மற்றும் பஞ்சாப் மாகாண அரசுகள் பாலம் கட்ட தவறி விட்டன. இதனால், ஆற்றை கடக்க பழைய மர படகுகளை மக்கள் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் இரு அரசுகளும் இழப்பீடு வழங்க வேண்டும் என உயிரிழந்தவர்களின் உறவினர்களில் ஒருவரான சர்தார் அப்பாஸ் கான் சொலாங்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top